
குழந்தைகளுக்குக் கதைசொல்வதைவிட குழந்தைகளைப் பற்றிய கதைகளைச் சொல்ல வேண்டியது சிறார் இலக்கியத்தின் முதன்மைச் செயல். ஒரு மனிதன் குழந்தைகளின் இயல்பை. வேடிக்கைத்தனத்தை, விதிகளுக்குட்படாத சுதந்திர மனப்பாங்கை, உள்ளுணரும் ஆற்றலை துல்லியமாகக் காண உளவியல் நூல்களைவிட கதைகளே துணை நிற்கின்றன. குழந்தைகளைப் பற்றிய பல கதைகள் பெரியவர்களுக்கான தனித்த வடிவத்தில் இருந்தாலும் சில கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளதைப்போல் சிறாருக்கும் பெரியவர்களுக்குமாக படைப்புச் செழுமையோடு வெளிப்பட்டுள்ளன.
குழந்தைகளின் ஆழம்தொட்டு கதைசொல்லும் கதைசொல்லிகள் சிறார் உலகில் தனித்துவம் வாய்ந்தவர்கள். பெரும் மதிப்போடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். குழந்தைகளுக்கு சமூகநீதி, இயற்கை, பண்பாடு மற்றும் அரசியலைக் கற்றுத்தரும் நோக்கோடு எழுதிக்குவிக்கப்படும் அபத்தமான பல சமகால நீதிக்கதைகள் குழந்தைகளைப் பற்றிய அதன் அறியாமையைத் தன்போக்கில் வெளிப்படுத்தி விடுகின்றன.
குழந்தைகளின்மேல் பெரும் மதிப்பு கொண்டவராக கதைகளின் வழியே குழந்தைகளை நெருங்கிச் சென்றவராக சிங்கர் இருந்ததையே அவரது கதைகள் பேசுகின்றன.
குழந்தைகளின் கலைமனதையும் கதைகளுக்குள் இயக்கம் பெறும் குழந்தைகளின் அகவுலகையும் ஒருங்கே கண்டுகொண்டவராக ஐசக் பஸோவிச் சிங்கர் இருக்கிறார். குழந்தைகளின் பெரும் மதிப்பான மையப்புள்ளியை சென்றடைந்த உற்சாகத்தில் இருந்தே அவரது கதைகள் வெளிப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தன் இனக்குழுவின் மரபை முன்வைப்பவராகவும் நவீனத்தன்மை மங்காத கதைகளைப் படைத்தவராகவும் வெளிப்படுகிறார் சிங்கர். குழந்தைகளை மறைமுகமாக தன் அறிவுக்கும் அதிகாரத்திற்கும் கீழே கொண்டு செல்லாத உயர்ந்த படைப்புகள் அவரது கதைகள்.











