
ஐந்தாயிரம் ஆண்டுகாலத் தொன்மையும் அறிவியல் வழிப்பட்ட மெய்யியல் அடித்தளமும் கொண்ட தமிழ்ச் சமூக வரலாற்றின் மீது பூசப்பட்ட பிராமணிய மாயத் தோற்றங்களைக் களைத்தெறியும் உன்னதப் பணியை வரலாற்று ஆய்வாளர் கணியன்பாலன் அவர்கள் இந்நூல் மூலம் நெஞ்சுறுதியோடு ஆற்றியுள்ளார். தமிழ் அறிவுலகில் புதிய வரலாற்றுப் பாதையை இந்நூல் விதைத்துள்ளது.
பழந்தமிழர் இலக்கியங்களில் செய்யப்பட்ட இடைச்செருகல்களையும் தவறான பொருள் விளக்கங்களையும் கல்வெட்டுகள் மற்றும் மூலச்சான்றுகளின் துணைகொண்டு இந்நூல் வேரறுக்கிறது. சங்க காலத் தமிழ்ச் சமூகம் என்பது முற்றிலும் சாதியற்ற சமயமற்ற முற்போக்குச் சமூகமாகத் திகழ்ந்தது என்பதையும், தமிழ் வேள்விகள் என்பது வடநாட்டு அக்னி யாகங்கள் அல்ல, அவை தமிழரின் கொடைமரபுகளே என்பதையும் சான்றாதாரங்களுடன் நிறுவி, காலம் காலமாக நிலவி வந்த வரலாற்றுப் பிழைகளை இந்நூல் உடைத்தெறிகிறது.
கி.பி. 1400 வரை தமிழ்நாட்டில் இன்றைய சாதிக் கட்டுமானமோ, வைதீக பிராமணிய மேலாதிக்கமோ வலுவாகக் காலூன்றவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக இந்நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தமிழரின் அசல் அடையாளத்தை மீட்க ஓலைகளையும் கல்வெட்டுகளையும் முதன்மைச் சான்றுகளாகக்கொண்டு போலி வரலாற்றுப் புனைவுகளை துணிச்சலுடன் தோலுரித்துக் காட்டியுள்ள ஆய்வாளர் கணியன்பாலன் அவர்களின் ஆய்வுப்பணி வரலாற்றில் நிலைத்து நிற்கப் போவதாகும்.
தமிழரின் சமூக விடுதலைத் தேடலில் ஒரு மைல்கல்லாக விளங்கும் இந்த வராற்று ஆய்வுநூலை வெளியிடுவதில் பன்மைவெளி பெருமிதம் கொள்கிறது.











