
இன்றைக்கும் ஒரு வெளிர் நிற
வண்ணத்துப் பூச்சி பறந்தது.
அதே தானா தெரியாது.
வண்ணத்துப் பூச்சி பறந்த
திசை முழுவதும்
திரும்பி நானும் பார்த்தேன்.
அதே உலகம் போலத்தான் இருந்தது.
பதினோரு படிகள் உள்ள ஏணி அது.
எத்தனை படிகள் ஏணியில்
என்று கேட்டேன்.
எல்லோரும் பதினொன்று என்று
சரியாகச் சொன்னார்கள்.
ஒருவர் மட்டும்
‘பன்னிரெண்டு' என்று
மிகச் சரியாகச் சொன்னார்.
எல்லா ஏணியின்
கடைசிப் படிகளுக்கும் மேலே
எப்போதும் இருக்கிறது
கண்ணுக்குத் தெரியாத
இன்னொருபடி.











