
நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ? எனக்கு வருகிறதே! என்ன செய்ய? அன்று புதன்கிழமை என்று எண்ணுகிறேன். எங்கள் தெருவில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து மேளச் சப்தம் கேட்டது. வழக்கம்போல நேற்றைய உலகத்தை அசைபோட்டுக்கொண்டு படுக்கையில் புரண்டுகொண்டே கிடந்த எனக்கு, நாதசுர சப்தம் காதில் விழுந்த மாத்திரத்திலே, ஒன்றன்பின் ஒன்றாகப் பல சாவு ஞாபகங்கள் வந்தன. நாதசுரம் காதைத் துளைத்தது. மூன்றாவது வீட்டில் தவுல் பிய்ந்துவிடும்போல இருந்தது, என் காதுத் தவுலையும் பிய்த்துக் கொண்டு. என் சிந்தனை மூட்டம் அச்சப்தம் கேட்டே கலைந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சாதாரணமாக மேளச் சப்தத்தைக் கேட்பவர்கள் சுபமான காரியங்களுடன் சேர்த்துக் கணிப்பர். அதுதானே மனித சுபாவம்? என் சுபாவம் சற்றே மாறுபட்டது. விசித்திரமானது. சற்றே என்ற சொல்லும் பிசகுதான். முற்றிலும் விசித்திரமானது என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பதினெட்டரை வருஷங்களில் நான் அறிந்துள்ள, நேரில் கண்ணுற்ற சாவுகளை எல்லாம் எனக்கு அது நினைவூட்டியது. ஆமாம். சாவுகளைத்தான்!











