
அ.முத்துலிங்கத்தின் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கு தனியான தோரணை உளது. அதைப் போலவேதான் அவரது கதைசொல்லல் திறனுக்கும். அவரது கதைகளை வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் என்னுடைய தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு அதனது சாரத்தை கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது. அழிந்தொழிந்த வம்சமொன்றின் பெயர் பொறித்த செப்பு பட்டயம் போல, செல்லரித்து எஞ்சிய ஓலைச்சுவடியென இந்தக் கதைகள். அ.முத்து லிங்கத்தின் எழுத்து விஷேசமென்றால் பகிடியோ தகவல்களோ மட்டுமல்ல. என்றைக்கும் மாறாத கதைசொல்லியின் குரல். எங்கும் இறுக்கம் தேடாத கலையின் மொழி. கவித்துவ தருணங்களை நிர்ப்பந்தமாக உருவாக்க எண்ணாத புலமை. அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம் தான் எனது தாயகம். அவரது செவ்வியல் பின்னணிதான் எனதும். ஈழரின் இலக்கியத்திணையில் அ. முத்துலிங்கம் முதுகிழவனும் மூதாயும். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தில் அவர் பல கண்டங்களை அறிவித்த ஏகன்.
- அகரமுதல்வன்.











