சித்ரூபனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரே இடத்தில் நடப்பதாக இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடு என வெவ்வேறு இடங்களில், களங்களில் நடப்பதாக உள்ளது சிறப்பு.
மயிலையோ, மதுரையோ, மும்பையோ, லண்டனோ எதுவாயினும், அந்த ஊர்களின் சாலைகள், இடங்கள், அதனூடே பயணங்கள் எனப் போகிறபோக்கில் இயல்பாகக் குறிப்பிடப்பட்டிருப்பது நமக்கும் ஒருவிதப் பயணச் சுகத்தைத் தருகிறது.
கதை நடக்கும் இடம் மட்டுமல்ல, சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் சொல்லாமல் உணரப்படுவது சிறப்பு.
சிறுகதை இலக்கணத்தில் அடங்காத, அதேநேரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் சில கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இலக்கணம் மீறியிருப்பினும் அவை நல்ல கதைகளே என்பதை மறுப்பதற்கில்லை. சித்ரூபனின் மனோதர்மமும் ஆங்காங்கே கதைகளில் வெளிப்படுகிறது.
நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தது சித்ரூபனின் இத்தொகுப்பு.
- எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்.