இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருவது திரைப்படங்கள். 1980-90களில் வெளியான திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரங்களாகவே தங்களைக் கருதிக்கொண்டிருந்தனர் வெகுமக்கள். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்ந்தன தமிழ்த் திரைப்படங்கள். காதல், உறவுகளின் பாசம் - உரசல்கள், பக்தி... என எல்லா ரசனைகளின் கலவையாக வெளிவந்த திரைப்படங்கள் மக்களைக் கவர்ந்ததில் வியப்பதற்கில்லை. பெண்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. ‘ஒரு திரைப்படத்தின் வெற்றி அதைப் பார்க்கும்போது மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல, பார்த்து முடித்து அதுகுறித்து எப்படிப்பட்ட உரையாடல் நிகழ்கிறது என்பதிலும் உள்ளது' என்று குறிப்பிடும் இந்நூலாசிரியர், அப்படிப்பட்ட திரைப்படங்களையும் மக்கள் மனதில் குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்திய உணர்வுகளையும் இணைத்து ‘திரையெல்லாம் செண்பகப்பூ' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். திருவிழாக்கள் பெண்களுக்குத் தந்த சுதந்திரம், குதூகலம், பக்திப் படங்கள் பார்த்து சாமியாடிய பெண்கள், ஆற்றங்கரை குளியலின்போது பெண்களிடையே நிகழும் உரையாடல் என சினிமா கதாபாத்திரங்களையும் நிகழ்காலப் பெண்களின் வாழ்வையும் இணைத்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய உணர்வைத் தருகின்றன. இனி இந்தத் திரையெல்லாம் செண்பகப் பூக்களைக் காணச் செல்லுங்கள்.