


*** 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் புத்தகம்*** ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் ***
தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக நாவல்கள் எழுதப்படுகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் எழுதும் நாவல்களின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேலாக இருக்கின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்துள்ளேன். அந்த நாவல்களிலிருந்து சந்திராவின் இந்த 'செம்பொன்' நாவல் வேறுபடும் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது.இந்த நாவலில் போர்க்கால வாழ்க்கையின் துயரத்தை மட்டுமே சொல்லாமல் அதற்குள் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை எழுதியுள்ள பகுதிகள் மிகமிக முக்கியமானவை.அரசு அதிகாரிகளாக இருந்த தமிழர்களின் நேர்மை, பணியில் ஈடுபாடு காட்டும் திறன் என்பன அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்தன என்பதைச் சொல்வதோடு, அவர்களின் மனநிலைகள் அரசாங்கத்திற்கும் விடுதலைப்போராளிகளுக்கும் இடையே தவிப்பில் இருந்தன என்பதைச் சொல்கிறது. இதற்கு முன்பு நான் வாசித்த புனைகதைகள் இதற்குள் எல்லாம் நுழையவே இல்லை. அவையெல்லாம் போர்க்களத்தை மட்டும் எழுதும் ஒற்றை நோக்கத்தோடு எழுதப்பட்டனவாக இருந்தன.
பேராசிரியர் அ. ராமசாமி











