


அளவான உரையாடல் பகுதிகளையும் விரிவான விவரணைப் போக்கையும் தன் பலமாகக் கொண்டுள்ள கதைகள் இவை. எல்லாக் கதைகளிலும் விசாரணை தொனி மையமென இழையோடு கிறது. கதைசொல்லிகள் உணர்ச்சி யின் பிடியில் இருக்கும்போதும் தர்க்கத்துடன் சூழலை அணுகி விடை காண்பவர்களாக உள்ளனர். மரபின் பிடியிலிருந்து விலகச் சாதுர்யத்தைக் கைக்கொள்கின்றனர். ஏகமெனக் காட்சியாகி மலர்கின்ற இச்சிறுகதைகள், காலமாற்றத்தின் பல்வேறு அலகுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
புதிய காலம் வழங்கியிருக்கும் பொருளாதார விடுதலைக்குப் பின்னும்கூடத் தனிமனிதனை விடாமல் பற்றியிழுக்கும் சமூகத் தளைகள் அறுபட்டு விழும் இடத்தில் பல கதைகள் முடிவதுபோல் தொடங்குகின்றன.
எளிய பொருள் பொதிந்த மொழியாட்சியின் மூலம் சிறுபுள்ளியிலிருந்து படரவிருக்கும் பெருவெடிப்பின் தருணங்களைத் தொட்டுவிட்டு அமைதியாய்க் கடந்து செல்கிறார் பெருமாள்முருகன்.











