திரைமொழியின் வீரியத்தை வெளிச்சமிடும் எழுத்து!
காக்கை இதழைப் படித்து வாசிப்பாளர்களாய் எனக்கு அறிமுகமாகி, ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமலே நீண்டகால நட்பைப்போலக் கைபேசியிலும் தொலைபேசியிலும் அணுக்கமாகப் பேசி, நீண்ட உரையாடல்களை நிகழ்த்தியதன் மூலம் காக்கையின் மதிப்பிற்குரிய எழுத்தாளர்களாகப் பங்கெடுத்து எனக்கு நெருக்கமான நண்பர்களாகவும் தொடர்கிறவரில் ஒருவர் திரு. எஸ்.இளங்கோ.
சென்னையில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு வந்தவர். காக்கை அலுவலகத்துக்கும் வந்திருந்தார். ஒருவரை ஒருவர் முகம்பார்த்துப் பேசிப் பழகி நட்பைத் தொடர்கிற தருணங்கள் அதன்பிறகே வாய்த்தன. அதன்பின்னர் எப்போது சென்னைக்கு வந்தாலும் சந்தித்து மகிழ்வதைக் கடமையாகக் கொண்டிருக்கிறோம்.
ஒடுக்குமுறைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கிற காக்கையின் குரலையும் அதன் எழுத்துப்போக்கையும் அடையாளம் கண்டுகொண்ட இளங்கோ. தேர்ந்தெடுத்த உலக சினிமாக்களை காக்கையின் இதழ்தோறும் ஒளிரச் செய்தார்.
அவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் உரத்த குரலில் உரிமை முழங்கும்; கனத்த குரலில் கண்ணீர் சிந்தும்; பனித்த குரலில் பாலியல் பேசும்: நிமிர்ந்த குரலில் நியாயம் கேட்கும். அந்தக் குரல்கள் ஒவ்வொன்றும் காக்கையின் பக்கங்களில் ஒலித்ததோடு வாசக எல்லையையும் விரிவாக்கித் தந்தது.
நூல் வடிவம் பெற்றிருக்கிற இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை காக்கையில் வெளிவந்தவை; வாசகர்களால் படிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டவை. எனினும், நூல்வடிவத்தில் கோவையாகப் படிக்கிறபோது ஒவ்வொரு சினிமா ரசிகனையும் நட்பாக்கி கைகோத்துக்கொள்ளும் திரை மொழியின் வீரியத்தையும் வெற்றியையும் அது வெளிச்சமிட்டுக் காட்டும்
இதுபோன்ற நூல்களைத் தமிழுலகத்துக்குத் தொடர்ந்து அவர் அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது என் அவா.
வாழ்த்துக்களுடன்
வி. முத்தையா