பண்டிதை விசாலாக்ஷி அம்மாள்
(1881-1926)
தமிழில் புதினங்கள் தோன்றியக் காலத்தில் புதினங்கள் எழுதிய முதல்
பெண் புதின எழுத்தாளர் பண்டிதை விசாலாக்ஷி அம்மாள் ஆவார்.
தமிழின் முதல் பெண் இதழாளர் எனவும் ஆய்வாளர்களால்
கருதப்படுகிறார். 1880களில் புகழ்வாய்ந்த சமஸ்தானங்களில் ஒன்றான
மைசூர் சமஸ்தானத்தில், அரசவை இசைக்கவிஞராக இருந்த
வெங்கட்ராம ஐயருக்கும், சுப்புலக்ஷ்மி அம்மையாருக்கும் 1881இல்
மகளாகப் பிறந்தவர் பண்டிதை விசாலாக்ஷி அம்மாள். இளம்
வயதிலேயே கைம்பெண்ணாண இவர் தனது கல்வியினைத்
தொடர்ந்தார். தந்தையின் சொல்லை மீறியே எழுத்தாளராகவும்,
இதழாளராகவும் பணியினைச் செய்து வந்தார். அவர் 1902லிருந்து
1926 வரை 30 நாவல்கள், நாடகம் மற்றும் சிறுகதைகள் பலவும்
எழுதியிருக்கிறார். வி.நடராஜ் ஐயரால் நடத்தப்பட்ட 'லோகோபகாரி'
இதழின் உதவி ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
மேலும் 'ஹிதகாரணி' மற்றும் 'ஞானச்சந்திரிகா' என்னும் இரு
இதழ்களையும் நடத்தி வந்துள்ளார். 1910-ல் சிருங்கேரி மடம் இவர்
நடத்திய ஞானசந்திரிகா இதழைப் பாராட்டி 'பண்டிதை' என்னும்
பட்டத்தை வழங்கியது. முதல் பெண் புதின எழுத்தாளர் மற்றும் முதல்
பெண் இதழாளர் என்றாலும் தமிழ்ப் புதின வரலாற்றில் இவரது பெயர்
குறிப்பிடும் படியான புகழை அடையவில்லை. இவரது ஒவ்வொரு
படைப்பும் அப்போதே ஆயிரம் படிகள் வரை வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.