


பேராசிரியர் கோவிந்தராசனார் 17 ஆண்டுகள் புகாரிலிருந்து மதுரை வரை கால்நடையாகவே சென்று ஆய்வு மேற்கொண்டு சிதிலமடைந்த கண்ணகி கோட்டத்தை தற்போதைய கேரள மாநிலத்தில் உள்ள நெடுவேல் குன்றத்தில் கண்டடைந்தார். தமிழ் வேந்தர்கள் எடுப்பித்த கற்கோயில்கள் சிதிலமடைந்துவிட்டாலும் இன்றும் இளங்கோவடிகள் வடித்த சொற்கோயில் கட்டுக்கோப்பாக இருக்கிறது. தமிழ்நாடு தாண்டிக் கேரளாவிலும், இலங்கையிலும் கண்ணகி வழிபாடு இன்றும் மரபுரீதியாகத் தொடர்கின்றது.
சிலப்பதிகாரத்தை இப்படிச் சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்த்த காரணத்தால் சிலம்புச் செல்வர் என்று பெயர் பெற்றவர் தமிழக எல்லைகளை மீட்ட சுதந்திரப் போராட்ட வீரர், தமிழரசுக் கழகத்தின் நிறுவனர் அய்யா ம.பொ. சி அவர்கள். எதிர் துருவங்களாக இருந்தாலும் தமிழ்த்தேசிய அடையாளமாக இருந்த கண்ணகியைத் திராவிட அரசியலும் தன் கையில் எடுத்துக் கொண்டபோது மொழிப்போருக்கான இரண்டாயிரம் வருட வரலாற்றுத் தொடர்ச்சியை அது நிறுவியது.
மாதவிகள் கோவலன்கள் மீது வழக்குத் தொடுக்கும் காலமிது. பாரதி ஏன் கண்ணகியை வீரத் தாய் என்கிறார்? பாரதிதாசன் ஏன் கண்ணகி புரட்சிக்காவியத்தை எழுதினார்? சமகாலத்தில் பெண்கள் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறிக்கொண்டிருந்தபொழுது கண்ணகி செய்தது யுகப் புரட்சிதான். அந்தவகையில் பெண் உரிமைக்குக் குரல் கொடுப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதற்கு கண்ணகியின் உருவகம் முக்கிய பங்கு உண்டு.
செம்மொழித் தகுதிபெற்ற மொழிகளுள் காதலும் வீரமும் கொண்டாடப்படாத உலக இலக்கியமே இல்லை எனலாம். அரசனானாலும், படைத்தலைவனானாலும் அவனது மெய்க்கீர்த்திகளை உலகக் காப்பியங்கள் அனைத்துமே உயர்த்திப்பிடிக்க மறந்ததில்லை. சங்க இலக்கியம் இதில் எங்கு ஒருபடி மேலே உயர்ந்து நிற்கிறது என்றால் போரில் வீரமரணத்தைத் தழுவிய காவியத்தலைவனுக்கு நிகராகக் குடிமக்களுள் ஒருத்தியைக் காவியத்தலைவியாகவும் பத்தினித் தெய்வமாகவும் பதிவு செய்தவிதத்தில்தான். ஆக கண்ணகி கையில் ஏந்தியிருப்பது சிலம்பை மட்டுமல்ல. இரண்டாயிரம் வருடங்களாக பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானம் ஆகிய தமிழர்களின் வாழ்க்கை விழுமியங்களை மூன்று புள்ளிகளாகக் கொண்ட பண்பாட்டுக் கேடயத்தையும்தான்!











