


கலைஞர் ஒரு போராளி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருடைய வாழ்க்கையை உற்றுக் கவனித்தால், அவர் தன் சொந்த நலனுக்காகப் போராடலில்லை என்பது புரியும். அவர் தன் வாழ்நாள் முழுவதும் எதற்காகப் போராடினார்? எப்படிப் போராடினார்? அவர் அப்படிப் போராடவில்லை என்றால் தமிழகம் என்றைக்கோ தன் அடையாளத்தை இழந்து காணாமல் போயிருக்கும். அப்படித் தமிழகத்தைத் தலைநிமிர விடாமல் எது தடை செய்தது? யார் தடை செய்தார்கள்? அவற்றிலிருந்து தமிழகத்தைக் கலைஞர் எப்படிக் காப்பாற்றினார்? என்ற வினாக்களுக்கான விடையைப் பார்க்கப் போகிறோம்.
தமிழக வரலாற்றில், சங்க கால மன்னர்களை 'தலையாலங்கானத்துச் செருவென்ற 'கடாரம் கொண்டான். 'கங்கை கொண்டான்" என்ற மெய்க்கீர்த்திகளுடன் தான் குறிப்பிடுவர். அதேபோன்று, இந்த நூற்றாண்டின் வரலாற்றை எழுதும்போது, கலைஞரின் சாதனைகளைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது. அப்போது, அவருடைய பெயரும் இதுபோன்றதொரு மெய்க்கீர்த்தியுடன் தான் குறிப்பிடப்படும். அது என்னவென்றும், அப்படி ஒரு மெய்க்கீர்த்தியைக் கலைஞருக்குப் பெற்றுத் தந்த அந்தப் போராட்டத்தைப் பற்றியும் இந்த நூலில் பார்க்கலாம்.











