ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் இயக்குநர்
கே.பாலசந்தர் என்றால் அவரைக் கதாநாயகனாக நிலைநிறுத்தியவர்
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். 72 படங்களை இயக்கிய
எஸ்.பி.எம், ரஜினியை வைத்து மட்டுமே 25 படங்களை இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்ற உயரத்தை அடைய இந்தப் படங்களே
அடித்தளமாக அமைந்தன.
இந்த 25 படங்களிலும் எஸ்.பி.எம் ரஜினியைப் பலவிதமான
கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவரது நடிப்பை மெருகேற்றினார்.
முரட்டுக்காளை, புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, ஸ்ரீ ராகவேந்திரர்,
நல்லவனுக்கு நல்லவன், குரு சிஷ்யன், பாண்டியன் என எஸ்.பி.எம்
ரஜினியை வைத்து இயக்கிய 25 படங்களின் சுவாரசியம் மிக்க
அனுபவத் தொகுப்பைப் பத்திரிகையாளர் எஸ்.சந்திரமௌலி
எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேரடியாகப் பெற்று இந்தப் புத்தகத்தில்
பதிவு செய்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் திரையுலக வளர்ச்சியையும், தான் ஏற்ற ஒவ்வொரு
வித்தியாசமான கதாபாத்திரத்திற்காக அவர் அளித்த கடும் உழைப்பையும்
அர்ப்பணிப்பையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். அன்றைய
திரையுலகம் எப்படி இயங்கியது என்பதைச் சொல்லும் காலக்
கண்ணாடியாகவும் இந்த நூல் விளங்குவது கூடுதல் சிறப்பு.