


நபிகளாரின் அவை ஒரு திறந்த பல்கலைக் கழகமாக விளங்கியது. அதன் பேராசானாக அன்னார் இருந்தார்கள். அங்கு சமுதாயத்திலிருந்த எல்லா மட்டத்தவர்களும் வந்து அமர்ந்து பாடம் கற்றார்கள்; பயிற்றுவிக்கப்பட்டார்கள். வாழ்க்கைக்குத் தேவையான எல்லா பாடங்களும் அங்கு போதிக்கப்பட்டன. அவை அனைத்தும் தாக்கமிக்க வாழ்க்கைப் பாடங்களாக அமைந்தன. அவர்களின் போதனைகள் வெறும் உரைகளாக மாத்திரம் அமைய வில்லை. மாறாக அன்னார் பல்வேறுபட்ட உத்திகளைக் கையாண்டு தனது கொள்கைகளை உள்ளங்களில் விதைத்தார்கள்.
நபிகளாரின் அவையின் மேற்குறிப்பிட்ட சிறப்பம்சங்களை யெல்லாம் தத்ரூபமாக விளக்குகின்றது உங்கள் கரங்களில் தவழும் 'அண்ணலாரின் அவைத்தோழர்கள்' என்ற ஆக்கம். நபிகளாரின் அவையை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது இந்நூல்.
படிப்பதற்கு சுவையான, எளிமையான, இனிமையான, இயல்பான ஆக்கங்களைச் சுமந்துள்ளது இந்நூல். 'அண்ணலாரின் அவைத்தோழர்கள்' என்று தலைப்பிட்டு ஆரம்பம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் எழுதி முடித்துள்ளார் நூலாசிரியர்.











