


ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊக்கமூட்டும் சக்தியாக விளங்கினார். அவர் மறைந்த பிறகும் அவரது வாழ்க்கை மாணவர்களுக்கு உத்வேகமூட்டுகிறது. அவருடைய சாதனைகளையும் போராட்டங்களையும் கூறும் ‘அக்னிச் சிறகுகள்’ நூலை மாணவர்களை மனதில் கொண்டு சுருக்கமாகவும் எளிமை யாகவும் வழங்குகிறோம். இந்த மாணவர் பதிப்பு தமிழ் மாணவர்கள் அப்துல் கலாமை நன்கு அறியவும் அவருடைய வாழ்விலிருந்து ஊக்கம் பெறவும் உதவும்.
*
எங்கோ ஒரு மூலையில், வசதிகளற்ற சமூகப் பின்னணியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு குழந்தை என்னுடைய வாழ்க்கை எப்படி உருவானது என்பதைத் தெரிந்துகொண்டால் ஓரளவேனும் ஆறுதல் அடையக்கூடும். அத்தகைய குழந்தைகள் பின்தங்கிய நிலையிலிருந்தும் நிராசை நிலையிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள இது உதவக்கூடும். இப்போது அவர்கள் எப்படியிருந் தாலும் இறைவன் தங்களோடு இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் அவர்களுடன் இருக்கும்போது யார் அவர்களுக்கு எதிரியாக இருக்க முடியும்?











