கர்மன்
கர்மன்
எனது இந்த நாவலும் அந்த வகைதான். 2021ல் நான் எதிர்கொண்ட சில மரணங்கள் எனக்குள் எழுப்பிய கேள்விகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பதிலே கிடைக்காத கேள்விகள் என்று தெரிந்தும், என்னால் அவற்றைப் புறம்தள்ள முடியவில்லை.இந்த நாவல் அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. அந்தக் கேள்விகளை நோக்கிய தேடலும் அல்ல. ஒருவகையில் அந்த வலியிலிருந்து நான் வெளிவர எடுத்துக்கொண்ட பாதை. ஆம், பாதை மட்டுமே. இந்த நிமிடத்திலும் அந்த மரணங்களின் வலி அப்படியே இருக்கிறது. அந்தக் கேள்விகளும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனாலும் இந்த நாவல் ஏதோவொரு வகையில் என்னை ஆற்றுப்படுத்தவும் செய்கிறது.
இந்த நாவலில் முதலில் தோன்றியது ஒரு வார்த்தை. அந்த வார்த்தையில் இருந்தே முழு நாவலும் பிறந்தது கர்மன். கர்மாவின் இன்னொரு சொல். இந்தச் சொல் பிறந்ததும் நாவல் முழுக்க முழுக்கத் திறந்துகொண்டது.2022 சிவராத்திரி அன்று இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். அப்போது என் வாழ்வில் நிகழ்ந்த வேலை மாற்றம், மெகா தொடர் வேலைகள் என நாவல் கிடப்பில் இருந்தது. ஆனாலும் உள்ளின் உள்ளே எப்போதும் கர்மனின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. எங்கேயோ யாரோ எப்போதோ 'கர்மா' என்று சொன்னாலோ, 'கர்மா' என்ற சொல்லைப் படித்தாலோ எனக்குள் நாவல் குறித்த கேள்வி பூதாகரமாக எழத் தொடங்கும். ஆனாலும் ஏனோ எழுதக் கை வரவே இல்லை. ஒரு கட்டத்தில் இந்த நாவலுக்குள் இனி இறங்குவது வாய்ப்பே இல்லை என்றெல்லாம்கூட நினைத்தேன். ஆனால் கர்மன் என்னைக் கட்டி இழுத்துக்கொண்டு போனது.
இந்த நாவலை எழுதி முடித்ததும் உண்மையில் எனக்குத் தோன்றிய எண்ணம், 'அப்பாடா!' என்பதுதான். அத்தனை அலைக்கழித்த நாவல் இது. யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல், படிக்கப் போகிறவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், காட்டாற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படுவது போல எழுதினேன்.. உண்மையில் இந்த நாவல் முழுக்க முழுக்க 100% கற்பனை மட்டுமே. அதேசமயம் உண்மையில் எங்கோ யாருக்கோ நிகழ்ந்த, எப்போதோ நான் கேட்ட கதைகளின் சுவடுகளும் இதில் இருக்கும். எல்லா யதார்த்தப் புனைவுகளும் அப்படித்தானே! கர்மனும் அதற்கு விதிவிலக்கல்ல.













