


1924ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் (தற்போது பாகிஸ்தானில்) இருக்கும் கோஹாட் நகரில் நடந்த வன்முறையில் 155 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த இந்துச் சிறுபான்மைச் சமூகமும் அங்கே இருந்து வெளியேற வேண்டிய துயர்நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, லாலா லஜ்பத் ராய் 'இந்து -முஸ்லிம் பிரச்சினை? என்னும் தலைப்பில் 13 கட்டுரைகள் எழுதினார். ஒத்துழையாமை மற்றும் கிலாஃபத் இயக்கங்கள் செயலற்றுப் போனதன் விளைவாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்ததால் பெருகிய வன்முறைகள் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தை அக்கட்டுரைகளில் வெளிப்படுத்தினார்.
மகாத்மா காந்தி மீதான அபரிமிதமான மரியாதையுடன், அவரை விமர்சிக்கும் லாலா லஜ்பத் ராயின் எழுத்துகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.
இந்துச் சமூகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. 'சுத்தி' மற்றும் 'சங்கதன்' பற்றி விவாதித்தார். 'தீண்டாமை' என்ற சமூக இழிவு களையப்பட வேண்டும் என்று சாடினார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வேண்டுகோளுடனேயே நிறைவு செய்கிறார்.
இந்த நூல் இந்தியாவில் நிலவும் மதக் கலவரங்களின் வரலாற்றையும் சமூகம் சார்ந்த அரசியல் அடிப்படைகளையும் காய்தல் உவத்தல் இன்றி விரிவாக ஆராய்கிறது.











