
"வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்குமுன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு. அதற்குரிய கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா,"