
அதி புனைவு, அறிவியல் புனைவு கதைகளை இவர் கையாளும் விதம் இவருக்கே உரிய தனித்த முறையில் அமைந்துள்ளது. விளக்கங்களோ வளவளப்போ இல்லாமல் அவை பல தளங்களில் எல்லைதாண்டும் எந்த முயற்சியும் இல்லாமல் வழுக்கிச் செல்கின்றன. யாரும் யாராகவும் உருமாறும் அதிசயங்கள் வெகு இயல்பாய் நடக்கின்றன. எது வாழ்க்கை, எது விளையாட்டு, எது மரணம், எது வாழ்வு, எது கடந்தகாலம், எது நிகழ்காலம், எது ஒரு நபரை உருவாக்குகிறது, உருவாக்கப்பட்ட அந்த நபர் யார் போன்ற கேள்விகளை அனாயாசமாகக் கேட்டுச் செல்கின்றன கதைகள். அம்பை -- மாலதி சிவராமகிருஷ்ணனின் கதைகள் வாழ்க்கையை விசாரணை செய்யும் வகைமைக்குள் அடங்குபவை. கடந்த கால நினைவுகளை நிகழ்காலத்தோடு சேர்த்துப் பேசுபவை. நீர்ச்சுழலுக்குள் சிக்கிய மிதவையைப் போல நாம் இக்கதைகளில் எல்லாத் திக்கிலும் அலைகிறோம். சிறுகதைகளின் கச்சிதம், அக்கச்சிதத்துக்குள் அரங்கேறும் புதிய முயற்சி என இரண்டும் ஒன்றுகொன்று பொருத்தமாக அமைந்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது.