
இடி அமின் போன்ற ஒரு கொடுங்கோலர் உருவாவதன் பின்னணி எதுவாக இருக்கும்? அவர் வளர்ந்த விதமா? அரசியல் சதுரங்கமா? அளவற்ற அதிகாரமா? மக்களின் கண்மூடித்தனமான ஆதரவா? இப்புத்தகம் அதை ஆராய முயல்கிறது. தனது விசித்திர நடவடிக்கைகளாலும் மோசமான ஆட்சியாலும், உலகக் கொடுங்கோலர்களின் வரிசையில் இடி அமின் தனித்துத் தெரிகிறார். உகாண்டாவைத் தனித்துவ நாடாக மாற்றவேண்டும் என்ற விருப்பம், மேற்கத்திய நாடுகளின் மீதான எதிர்ப்பு, தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு, தன் சொந்த மக்களிடையே அவர் உண்டாக்கிய இனவெறி, அதனால் ஏற்பட்ட இனப்படுகொலைகள், அனைத்து அதிகாரமும் தன்னிடம் குவிந்திருக்கவேண்டும் என்னும் தீராத போதை - இவை எல்லாம் சேர்ந்தே இடி அமினின் வாழ்க்கையைத் தீர்மானித்தன. இடி அமினின் அரசியல் பயணம் சில நல்ல நோக்கங்களையும் ஆனால் தவறான பாதைகளையும் ஒருங்கே கொண்டிருந்தது. கடுமையான வறுமைச் சூழலில் பிறந்த ஒரு மனிதனை ஆட்சியும் அதிகாரமும் எப்படி மாற்றுகின்றன என்பதற்கு இடி அமினின் வாழ்க்கை ஓர் உதாரணம். ஆப்பிரிக்க மக்களின் வாழ்வில் இன்றும் இடி அமின் நினைவுகூரப்படுகிறார். அது கருப்பு வெள்ளையாகவா இல்லை வண்ணமயமாகவா என்பதை, ஆப்பிரிக்க வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இந்தப் புத்தகம் விளக்குகிறது.