
ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகே நின்று எழுதப்பட்டவை. கதைகள் என்று சொல்லப்பட்டாலும், குறைவான புனைவுடன் உள்ளது உள்ளபடி சொல்பவை, வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசுபவை. எனவே கதைகளின் பதற்றத்தை வாசகனுக்குள்ளும் கடத்துபவை. இந்திய பாகிஸ்தான் பிரிவிளையை மனிதர்களின் துயரமாகப் பார்த்தவர் மண்ட்டோ. அவரது கதைகளின் அடிநாதம் இந்தத் துயரமே. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்த மண்ட்டோ, பிரிவினையின் போது நடந்த கலவரங்களாலும் படுகொலைகளாலும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். வெளிப்படையான எழுத்துகளுக்காக பாகிஸ்தான் அரசால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இப்படி எழுதினால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டார். மீள முடியாத துயரில் சிக்குண்டு குடியில் வீழ்ந்து உயிரிழந்தார். இத்தனை அலைக்கழிப்பிலும், மண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரங்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் குறித்தும், அவர்களது சுதந்திரம் குறித்தும் நிறைய எழுதினார். இதனால் இன்னும் தனித்துவமான எழுத்தாளரானார்