
ராமாயணம் ஒரு காவியம், ஒரு இதிகாசம் என்பதைத் தாண்டி, அது மகத்தான மந்திர சொரூபம். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒரு பகுதி சுந்தர காண்டம். இந்தக் காண்டத்தின் அதிதேவதை அனுமன், சுந்தர காண்டம் என்பது அனுமனின் சொரூபமே. அனுமனை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் கிட்டும். ஆனால், நூலை எவ்வாறு வழிபடுவது? நூலைப் பாராயணம் செய்வதே அதை வழிபடுவது.
அனுமனை அதிதேவதையாகக் கொண்ட சுந்தர காண்டப் பாராயணம் மிகவும் சக்தி வாய்ந்தது. கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி போலக் கேட்டதை அருளக் கூடியது.
சுந்தர காண்டம் என்றால் அழகான காண்டம் என்பது பொதுவான பொருள். சுந்தரம் என்பதற்கு அழகு என்பதோடு ஆனந்தம் என்ற பொருளும் உள்ளது. தொலைந்து போன பொருள் திரும்பக் கிடைத்தால் கிடைக்கும் ஆனந்தத்தின் பெயரே சுந்தரம். இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து போன சீதையின் அடையாளம் தெரிந்த காண்டம் என்பதால் இதற்குச் சுந்தர காண்டம் என்று பெயரிட்டார் வால்மீகி.
சீதா தேவி இருக்குமிடம் தெரிந்த பின் எத்தனை பேர் ஆனந்தம் அடைந்தார்கள்? முதன்முதலில் ஆஞ்சநேய சுவாமி. அவர் கூறிய பின் வாளர வீரர்கள். அதன் பின்னர் சுக்ரீவன். அதன் பிறகு ராமச்சந்திர மூர்த்தியும் லட்சுமணனும் ஆனந்தமடைந்தார்கள். அது மட்டுமல்ல! ராமன் எப்படி இருக்கிறான் என்பது பற்றித் தெரியாமல் வருந்திய சீதை, அனுமன் கூறிய பின் ஆனந்தமடைந்தாள். இத்தனை பேரின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதி ஆதலால் இது சுந்தர காண்டம். அதாவது ஆனந்த காண்டம். அதனால் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும்.
எப்படிப்பட்டவருக்கும் ஆதரவும் அமைதியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடியது சுந்தர காண்டம், பல விசேஷச் சிறப்புகளோடு கூடிய சுந்தர காண்டத்தில் சுந்தரம் அல்லாதது எதுவும் இல்லை.
ராஜி ரகுநாதன் மயக்கும் தமிழில் இதை எழுதியுள்ளார்.