
மஹாபாரதம் முழுவதும் மைய இழையாக ஓடிக்கொண்டிருப்பது பீஷ்மரின் வாழ்வும் மனப்போராட்டமும்தான். அப்படிப்பட்ட பீஷ்மர் உண்டாவதற்குக் காரணமான சந்தனுவின் ஆட்சிச் சிறப்பு, காதல், துயரம், வரம் போன்றவற்றை இந்த மஹாபாரதக் கதை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்தவனும், நூறு ராஜசூய வேள்விகளைச் செய்தவனுமான மஹாபிஷனின் மறு அவதாரமாகச் சந்தனு பூமியில் தோன்றுகிறான். முற்பிறவி வினையால் சந்தனு கங்காதேவியை அடைகிறான். அவளால் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும் துயரமும் பெரியனவாக இருக்கின்றன. அவளது பிரிவு அதைவிடப் பெரிதாகச் சந்தனுவைப் பாதிக்கிறது. அந்தத் துயரக் கடலில் மூழ்கியிருந்தவனுக்கு தேவவிரதன் என்ற படகு கிடைக்கிறது. அந்தப் படகில் மகிழ்ச்சியாகத் திரியும்போது, சத்தியவதி என்ற ஓடக்காரி அவனது வாழ்வில் நுழைகிறாள். காதல் துயரில் மூழ்குகிறான் சந்தனு. அதற்கு விலையாக பீஷ்மர் தன் அரசுரிமையை விட்டுக்கொடுப்பது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்வை ஏற்க வேண்டியிருக்கிறது.
சத்தியவதியின் தந்தை, தமது மகளுக்குப் பிறக்கப்போகும் மகனே அரசாள வேண்டும்; பீஷ்மரல்ல என்று நினைத்தது, பிற்காலத்தில் குருஜாங்கல நாட்டின் அரசியலில் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பது இக்கதையில் மறைபொருளாக வரும் செய்தி. மீனவப் பெண்ணின் வாரிசுகள் பாரத நாட்டின் ஆட்சிக்கட்டிலை அடைவதற்குக் காலம் ஏற்படுத்திய மாற்றங்களை வியாசரின் மொழியில் அறிவோம், வாருங்கள்!