
இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுள் மறக்க முடியாத பெயர் வ.வே.சு.ஐயர். லண்டனில் படித்துக்கொண்டு, கூடவே சுதந்திரத்துக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த இந்தியர்களிடையே சுதந்திர உணர்ச்சியைத் தூண்ட அயராது உழைத்தவர். சாவர்க்கரின் நண்பர். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற ஆசையில் ‘தமிழ்க் குருகுலம்' தோற்றுவித்தவர். ஆனால், ‘சம பந்தி போஜனத்திற்கு எதிராகச் செயல்பட்டார்' என்று, உண்மை நிலை உணராதவர்களால் சுய லாபங்களுக்காக முத்திரை குத்தப்பட்டுச் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானவர். தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர் என்பது இவரது கூடுதல் சிறப்பு. அத்தகைய மாமனிதரின் உண்மை வாழ்வைச் சொல்லும் இந்நூல், உங்களைக் கலங்க வைப்பதுடன், தியாகம் என்றால் என்ன என்பதையும் உணர வைக்கும். எளிமையான நடையில் மனதைக் கவரும் வண்ணம் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.