
கடவுள் என்பவர் இருக்கிறாரா இல்லையா? அந்தக் கடவுள் எவ்வாறு உலகத்தைப் படைத்தார்? இந்த உலகில் ஏற்றத்தாழ்வுகளும், பிணிகளும், துயரங்களும் நிகழ்வது ஏன்? கடவுளைப் பற்றிய இவ்வாறான பல்வேறு கேள்விகளுக்குரிய விடைகளை, உலகின் தொன்மையான இனங்களில் கூறப்பட்டுள்ள தொன்மக் கதைகள், சமயக் கருத்துக்கள், பக்திப் பனுவல்கள் ஆகியவற்றின் வழி ஆய்ந்து உரைப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது.
யூதர், கிரேக்கர். ரோமானியர், பார்சியர், ஆரியர், தமிழர் எனும் ஆறு தொன்மையான இனங்களில் கூறப்பட்டுள்ள கடவுள் பற்றிய தொன்மக் கதைகளை, சமயக் கருத்துக்களை ஆய்ந்து அவற்றின் வழி, "உலகிலேயே தமிழர்கள் மிகவும் குறைவான மூட நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்" என்னும் கால்டுவெல் கூறும் கருத்து மிகவும் சரி என்பதை உறுதிப்படுத்துகிறது இந்நூல்.
தமிழினமே இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தது என்றும் பிற இனங்கள் இயற்கையை கண்டு அஞ்சின என்றும் தனி நாயக அடிகளார் சான்றுகளோடு விளக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. தமிழரின் கடவுள் கோட்பாடானது பிற இனங்களின் கடவுள் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதையும் இந்நூல் நிறுவுகிறது. பிற இனங்கள் எல்லாம் மனிதனை அடிப்படையாக வைத்து, பல தெய்வங்களைப் படைத்துக் கொண்டு சமயப் போர்களால் அல்லலுற்ற நிலையையும், தொடர்ந்து போரிட்டு அழிந்த நிலையையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், தமிழகத்தில் பல்வேறு சமயங்களின் தாக்கத்தால் பல தெய்வங்களை வழிபட்டு மக்கள் வாழ்ந்தாலும், அவ்வப்போது தோன்றிய தமிழ் அறிஞர்கள் கடவுள் ஒருவரே என்பதனை வலியுறுத்தி வந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு தமிழினம் ஒப்பில்லாது உயர்ந்து விளங்குவதைச் சான்றுகளோடு ஆய்ந்து உரைத்துள்ளவர் பேராசிரியர் ப.மருதநாயகம். இவர் மேலைநாட்டுத் திறனாய்வு முறைகளையும் கீழை நாட்டு இலக்கிய மரபுகளையும் இணைத்துப் பாலம் அமைத்தவர்.











